பேச்சு:தொண்ணூறு
' தொண்டு' என்ற சொல் 'ஒன்பது' என்ற சொல்லோடு அதே எண்ணுப் பொருளைச் சங்ககாலத்தில் குறித்தது உண்மைதான்.
"தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற்று" - (தொல். 1358) "தொடித்திரித் தன்ன தொண்டுபடு திவவின்" - (மலைபடு. 21)
ஒன்பது என்பது கூட்டுச் சொல்லாகவும், தொண்டு என்பது ஒரே சொல்லாக அதற்கு முந்திய ஆறு, ஏழு, எட்டு ஆகியவை போல 'நேர்பு, நிறைபு' என்ற வாய்பாட்டை ஒட்டி குற்றியலுகரம் சேர்ந்தே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
ஒன்பது என்னும் பெயரை 'ஒல்லிய பத்து - குறைந்த பத்து - சுருங்கிய பத்து' என்ற பொருளில் இன்றும் வழங்கி வருகிறோம். அதே போல தொண்டு எனும் சொல்லுக்கும் 'சுருக்கம்/குறைபாடு' என்றே பொருளாக இருந்திருக்க வேண்டும். இல்லெனில் தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற சொற்கள் வந்திருக்காது.
ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களை அடுத்து பத்து என்ற சொல் வரும் போது எவ்வாறு புணர்ச்சி இருக்கும் என்று குற்றியலுகரப் புணரியலில் தொல்காப்பியர் கூறும் போது ஒன்பதிற்கு மட்டும் கொஞ்சம் விந்தையாக விளக்கு கிறார். இதைப் பல தமிழறிஞர்கள் (குறிப்பாக தேவநேயப் பாவாணர்) ஒப்புக் கொண்டதில்லை. இதைக் கொஞ்சம் விரிவாக அறிந்து கொள்ளுவது நல்லது.
தொல்காப்பியர் காலத்தில் X (ஒன்று முதல் ஒன்பது வரையான எண்கள்)+பத்து என்பது 'X-பஃது' என்று ஆகும். இன்று 'பஃதை' 'பது' என்றே சொல்லுகிறோம்.(அதனால் தான் ஐம்பது, அறுபது என்று வருகிறது). ஒன்பதும் பத்தும் புணரும் போது தொல்காப்பியர் கூறுவது:
ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்த பகரம் கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகர மாகும்.
என்ன சொல்லுகிறார்?
ஒன்பது + பத்து = ஒன் + பஃது = தொன் + பஃது = தொண் +பஃது =தொண்ண் +பஃது = தொண்ணூ + று = தொண்ணூறு
இந்தப் புணர்ச்சி முறை மிகவும் சுற்றிவருவதாக, ஒப்புக் கொள்ள முடியாததாக இருக்கிறது.
இதற்குப் பதிலாகப் பாவாணர் கூறுவது
எண் புணர்ச்சி முறை பழைய சொல் இன்றையச் சொல் (பழைய சொல்லுக்கு) 9 தொண்டு ஒன்பது 90 தொள் + பத்து தொண்பஃது தொண்ணூறு 900 தொள் + நூறு தொண்ணூறு தொள்ளாயிரம் 9000 தொள் + ஆயிரம் தொள்ளாயிரம் ஒன்பதாயிரம் 90000 தொண்பது + ஆயிரம் தொண்பதினாயிரம் தொண்ணூராயிரம்
அதாவது, தொண்டு எனும் சொல் சிறிது சிறிதாக வழக்கற்றுப் போகவே, அஃதிருந்த ஒன்றாம் இடத்திற்குத் தொண்பது (- ஒன்பது) என்னும் இரண்டாம் இடப் பெயரும், இரண்டாம் இடத்திற்குத் தொண்ணூறு என்னும் மூன்றாம் இடப் பெயரும், மூன்றாம் இடத்திற்கு தொள்ளாயிரம் எனும் நாலாம் இடப் பெயரும், வந்து வழங்குகின்றன. நாலாம் இடப் பெயருக்கு மேலிடச் சொல் இன்மையால், தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என்னும் சொல்லோடு ஆயிரம் என்பதைச் சேர்த்து, ஒன்பதாயிரம் அல்லது ஒன்பதினாயிரம் என்று சொல்ல வேண்டியதாயிற்று.
தொண்பது என்பது எப்படி ஒன்பதுக்கு ஒத்தது என்று கேட்டால் மற்ற திராவிட மொழிகளைத் தான் காட்ட முடியும்.
கன்னடம்: ஒம்பத்து; தெலுங்கு: தொம்மிதி; துளு: ஓர்ம்ப;கடபா: தொம்மிதி; குடகு: ஒயிம்பது; கோதம்: ஒன்பாத்; துடவம்: ஒன்பத்; கோண்டி: உண்மா; மேலும் ஒல்லுதலும் தொள்ளுதலும் குறைபடுதல்/சுருங்குதல் என்ற ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன.
தொண்டு என்பது ஏன் வழக்கற்றுப் போனது? தெரியாது. எப்படி தொண்பது (90) , 9-யைக் குறிக்கத் தொடங்கிற்று? தெரியாது. சங்க காலத்தில் இரண்டு சொற்களும் தெரிந்து இருப்பின் எது மக்கள் வழக்கில் (செய்யுள் வழக்கில் அல்ல) இருந்தது? தெரியாது. எப்பொழுது தொண்டு என்பது முற்றிலும் வழக்கொழிந்தது? பெரும்பாலும் சங்க காலத்திற்குப் பின் இது நடந்திருக்க வேண்டும். இது ஒரு கணிப்புத் தான். ஏன் தொல்காப்பியர் இப்படி வலிந்து தொண்ணூறுவுக்கான புணர்ச்சியைக் காண்பித்தார்? தெரியாது; ஒருவேளை அப்பொழுதே தொண்டு என்ற சொல் செய்யுள் வழக்கில் மட்டும் இருந்ததோ என்னவோ?
Start a discussion about தொண்ணூறு
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve தொண்ணூறு.