முசுப்பாத்தி என்று இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். நல்ல தமிழ்ச் சொல் போல் தோன்றாததால் தற்பொழுது விலக்கியுள்ளேன். எனினும், முசுப்பாத்தி பக்கத்தில் இதற்கான விளக்கத்தை தரலாம். fun என்பதை ஒற்றைத் தமிழ்ச் சொல்லில் சொல்ல இயலுமா? என் நீண்ட நாள் குழப்பமிது :(--ரவி 15:30, 28 ஆகஸ்ட் 2006 (UTC)


முசுப்பாத்தி… இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு: நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது. ‘இது நல்ல முசுப்பாத்தி’ என்றால் ‘நல்ல நகைச்சுவை’ என்று கருத்து. ‘முசுப்பாத்தியான ஆள்’ என்றால் ‘நகைச்சுவையான மனிதன்’. ‘முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்’ என்றால் ‘நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்’.

இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.

முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.

முசிதல் = 1.அறுதல். 2.கசங்குதல். 3.களைத்தல். 4.ஊக்கங் குன்றுதல். 5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.

முசித்தல் = 1.களைத்தல். 2.வருந்துதல். 3.மெலிதல். 4.அழிதல். 5.கசங்குதல்.

முசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow’s Tamil English Dictionary) முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow’s Tamil English Dictionary)

முசிப்பாற்றி – முசிப்பாத்தி - முசுப்பாத்தி. சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.

நன்றி: http://vasanthan.wordpress.com/2006/06/27/monday-may-16-2005/

--Jeyapal 18:24, 31 ஜனவரி 2007 (UTC)

நல்ல தகவலுக்கு நன்றி, ஜெயபால்----ரவி 10:45, 1 பெப்ரவரி 2007 (UTC)

Start a discussion about fun

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:fun&oldid=35466" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "fun" page.