ஒரு நிரலில் ஏற்படும் பிழைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. இலக்கணப் பிழை (syntax error). இதனை, மொழிமாற்றி (compiler) சுட்டிக் காட்டிவிடும். மொழி மாற்றும் நேரப் பிழை எனலாம். 2. தருக்க முறைப் பிழை (Logical Error) : இப்பிழையை மொழி மாற்றியோ, கணினியோ கண்டுபிடித்துச் சொல்லாது நிரல் முழுமையாக இயங்கும் ஆனால் பிழையான விடை கிடைக்கும். இதற்குக் காரணம் நிரலர் தருக்க முறையில் செய்த தவறாகும். 3. இயக்க நேரப் பிழை (run-time error) : மொழி மாற்றி பிழை சொல்லாது. நிரல் முழுமையாக நிறைவேற்றப்படாது. இயக்க நேரச் சூழல் (Run Time Environment) அல்லது கணினி முறைமையால் பிழை சுட்டப்பட்டு நிரல் பாதியிலேயே நின்றுவிடும்.