ஒரு நாட்டின் பணப்புழக்கம் நாணயம் மற்றும் காகிதத்தாள் வடிவங்களில் இருக்கும்...நாணயங்கள் பற்பல உலோகங்களிலான வட்டம் மற்றும் சதுரமான வில்லைகளில், பணத்தின் மதிப்புப் பொறிக்கப்பட்டு புழக்கத்தில் இருக்கும்...இதேபோல் ஒருவகைச் சிறப்பான காகிதத் துண்டுகளில், சிறு நீள்சதுர வடிவத்தில், பலநிறங்களில், பணத்தின் மதிப்பு அச்சடிக்கப்பட்டு, அந்தந்த நாட்டு அதிகாரப்பூர்வமான நடுவண் வங்கியால், பணம் மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டிருக்கும்...இந்தத் துண்டுத்தாள்கள், அரசுகளின் இலச்சினைகள் முத்தரிக்கப்பட்டும், பண மதிப்பிற்குத் தக்கவாறு உரிய அதிகாரிகளால் கையொப்பமிடப்பட்டும், பல இரகசிய அடையாளங்களையும் கொண்டிருக்கும்...ஓர் அரசின் கருவூலத்தில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களின் இருப்பைப் பொறுத்துதான் இத்தகையப் பணத்தை அச்சிடவேண்டுமென்பது பொதுவிதி...இந்தத்தாள்களை அதற்கான அதிகாரிகளிடம், வேண்டியபோதுக் கொடுத்துக் கேட்டால், உரிய மதிப்பிலான தங்கம் அல்லது வெள்ளியைக் கொடுப்பர் என்பது இதன் உட்பொருளாகும்...இத்தகைய பணத்தாள்களை நாணயத்தாள் என்றழைப்பர்...