பயனர்:Info-farmer/விக்சனரி

இணையம் இதற்கு ஈடில்லை இமயம். நாளுக்கு நாள் இணையத்தின் பயன்பாடு பெருகிக் கொண்டே வருகிறது. அதன் தொழில்நுட்பமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இவற்றின் முழுப்பயனையும் ஒருசில குறிப்பிட்ட மொழியினரே ஆண்டு அனுபவித்து வருகின்றனர். அதற்குக் காரணம் அம்மொழியினர் தங்களது எழுத்துக்களையும், சொற்களையும் கணினிக்குள் அடக்கி, எளிமையான முறையில் எங்கும் பயன்படும் படி இணையத்தில் நிலைநிறுத்தியுள்ளனர். இத்தகைய வளர்ச்சிக்கானக் காரணிகளில், அம்மொழியினரின் அகரமுதலி முக்கியபங்கு வகிக்கிறது. நம் தமிழ்மொழியும், அம்மொழிகளைப் போல மேன்மையுற, நாமும் நமது எழுத்துக்களையும், சொற்களையும் கணினிக்குள் அடக்க வேண்டும். நம் அகரமுதலிகளை மேன்மையுற செய்து, விரிவு படுத்த வேண்டும்.

நிலைமை: இப்பொழுது நாம் கணினியில் தமிழைப் பார்க்கிறோம். அனைத்து எழுத்துக்களையும் உள்ளடக்கி இருப்பது போல ஒரு தோற்றத்தில் மகிழ்கிறோம். ஆனால், உண்மையில் நமது மொழியின் அனைத்து எழுத்துக்களும் கணினிக்குள் அடங்கவில்லை. அத்தகைய நிலைமாற, நாம் அனைத்து எழுத்துரு தரப்பாட்டை(TACE-16) பின்பற்ற வேண்டும். இந்நிலையில், சொற்களை விவரிக்கும் அகரமுதலிகள்(dictionaries) இணையத்தில் உள்ள நிலையை நோக்குவோம்.

இணையஅகரமுதலிகள்: இணையத்தில் உள்ள பெரும்பான்மையான தமிழ்அகரமுதலிகள் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றின் பெரும்பகுதி சென்னைப்பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலியின் தரவுகளை உள்ளடக்கியதாகவுள்ளது. இந்த அகரமுதலி ஏறத்தாழ 100ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. அதில் ஏறத்தாழ500நூல்களில் இருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. 1, 25,000 உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளன. அவற்றுள்ள பெரும்பாலானவை, புறமொழிச்சொற்கள் ஆகும். செந்தமிழ் சொற்கள் குறைவு. இத்தகைய பேரகரமுதலியைப் பயன்படுத்தும் இணையங்கள், நூல் வடிவில் இருக்கும் அதே அமைப்பையே பயன்படுத்துகின்றன.

மாற்றம்: சற்று ஆழ்ந்து எண்ணுவோமாயின், நூல்வடி அமைப்பின் குறிபாடுகள் தெளிவாகும். குறிப்பாக சொல்லவேண்டுமாயின், காகிதவடிவத்தில் ஒரு சொல்லுக்கு கொடுக்கப்படும் இடம் ஓரிரு வரிகளே ஆகும். அந்த இடத்தில் அவர்கள் சொல்லுக்குரியதை சுருக்கித் தரவேண்டிய கட்டாயநிலையே உள்ளது.ஆனால், இணையத்தில் உள்ள அகரமுதலிகளுக்கு அத்தகைய கட்டாயநிலை இல்லாமல் இருந்தாலும், நூல்வடிவச்சொற்களின் எல்லைகளையேப் பின்பற்றுகின்றன. ஒருசொல்லுக்கான விரிவு ஓரிரு வரிகளுக்கு மாற்றாக, ஓரிரு பக்கங்களையம் தர இயலும் என்பதையே அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். இங்கு எத்தகையக் கட்டாயமும் இல்லை என உணர்ந்து நடைமுறைகளை அமை வேண்டும்.

தற்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சொற்களை, பெருமளவில் திரட்டி, அவற்றினை சென்னைப் பேரகரமுதலியை விட மேம்பட்ட வடிவை தந்தது, கிரியா இணைய அகரமுதலி எனலாம். இவர்கள் கணினியியல் தொழில்நுட்பத்தை இதற்கென உருவாக்கினர். இருப்பினும், இவற்றிலும் இலக்கியமேற்கோள்கள் இன்னும் தெளிவாக காட்டவேண்டும். இவர்களின் இணைப்பக்கத்தின் ஒருபகுதியை மட்டுமே, இலவசமாக காண இயலும்.

தமிழ்விக்சனரி: இது திறநிலைமென்பொருள் திட்டமென்பதால், உலகெங்கிலும் உள்ள ஆர்வாலர்களால் வளர்த்தெடுக்கப்படும் திட்டம் ஆகும். மேலும், இது பன்மொழிகளுக்கான அடித்தளத்தை உடையது என்பது மிகவும் குறிப்பிடதக்கது. இதில் அவ்வப்போது முனைப்பாக செயல்படுபவர்கள் ஒருசிலரே ஆவர். விக்சனரி என்ற சொல்லானது, விக்கி டிக்சனரி (wiki dictionary) என்ற சொல்லில் இருந்து உருவானது. இத்திட்டம் தமிழோடு 170மொழிகளில் செயல்படுகிறது. தமிழில் இத்திட்டம் 2004 ஆம் ஆண்டு சூலை24 நாளில் தொடங்கப்பட்டது. இன்றளவில் இத்தமிழ்விக்சனரி திட்டம், உலகமொழிகள் வரிசையில் 16வது இடத்திலும், இந்திய மொழிகளின் அளவில் முதல் இடத்திலும் இருக்கிறது.

Howard G. "Ward" Cunningham,
முதல்விக்கி மென்மியத்தை உருவாக்கியவர்

உலகில் இருக்கும் ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய தனித்துவமும், சிறப்பும் பெற்றும் விளங்குகிறது. இருப்பினும், இன்று சில மொழிகள் மட்டுமே உலகமக்களிடையே, பயன்பாட்டு அளவில் முன்னணியில் இருக்கின்றன. பிறமொழிகளின் சிறப்புகளையும், தொழில்நுட்பத்தினையும் தன்னுள்ளே ஏற்றுக்கொண்டு, மக்களின் பயன்பாட்டில் முன்னேறிய மொழிகளில், ஆங்கிலமும் ஒன்றாகும். ஆங்கில மொழியைப் போன்று, பிற உலக மொழிகளும் முன்னேற வேண்டும் என்ற நோக்கிலும், இலாப நோக்கம் அற்ற முறையிலும் இயங்கும், சேவை அமைப்பே விக்கித்திட்டங்கள்(Wiki projects) ஆகும். இத்திட்டங்கள் செயல்படத் தேவையான மென்மியத்தை(software) முதலில் உருவாக்கியவர் வார்டு கன்னிங்காம் ஆவார்.

விக்கி விக்கி என்ற அவாய் (en:Hawaiian language) மொழிச் சொல்லுக்கு, விரைவு, வேகம் என்பது பொருள் ஆகும். பிறமொழி வளங்களை அவரவர் மொழிக்கு கொண்டு வருதலுக்கு, அகரமுதலி (dictionary) முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு விக்கித்திட்டங்களில் இருக்கும், அகரமுதலிகளுக்கான கட்டமைப்பை நோக்குவோம்.

விக்கி அகரமுதலி(wiki dictionary) என்பதன் சுருக்கமே, விக்சனரி(wiktionary) ஆகும். இன்றளவில் இவ்விக்சனரித்திட்டம் 170மொழிகளில் உயிர்ப்புடன் செயல்பட அடித்தளமிடப்பட்டுள்ளன. இப்பட்டியிலில் இல்லா மொழிகளையும், இத்திட்டத்தில் கொண்டு வர முடியும்.இத்திட்டத்தில் இன்று நம் தமிழ் மொழி 16வது இடத்தில் இருக்கிறது. 2008 ஆம் ஆண்டிற்கு முன், தமிழ் விக்சனரி ஏறத்தாழ 30வது இடத்தில் இருந்தது.மார்ச்சு,2008‎ ஆண்டில் சுந்தர், இரவி என்ற இருவர், தமிழ் இணையக்கல்விக் கழகத் தரவுகளை ஒருங்குறிக்கு மாற்றி, ஒரு இலட்சம் சொற்களை, சுந்தர் தானியங்கி வழியேப் பதிவேற்றினர். இப்பதிவேற்றத்திற்கு பிறகு, தமிழ் விக்சனரி 8வது இடத்தினை எட்டியது. நாளடைவில் பிற மொழிகளின் வளர்ச்சி தமிழை பின்னுக்கு தள்ளிவிட்டது. இப்பொழுது தமிழ் விக்சனரி11வது இடத்தில் இருக்கிறது. சுந்தரும்,இரவியும் மற்றொரு விக்கித்திட்டமான, விக்கிபீடியா என்ற கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரும் தளத்தில், இப்பொழுது இயங்குகின்றனர்.

தமிழக அரசு, 2010ஆண்டு நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டில், தமிழ்விக்சனரிக்கு ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் சொற்களைக் கொடையாக வழங்கியது. அத்தரவின் 60-70% சொற்கள் ஏற்கனவே தமிழ்விக்சனரியில் இருந்தன. எனவே மீதமுள்ள சொற்களை மட்டும்தமிழ்தானியங்கி பதிவேற்றியது.அதன்பிறகு, மே,2011ஆம் ஆண்டில், கனடநாட்டில் வாழும் தமிழர், தமிழ் விக்சனரிக்கு சொற்கோவையைக் கொடையாக வழங்கினர். அவற்றினை காணலாம்.அத்தரவினையும், தமிழ்தானியங்கி பதிவேற்றியது.

விக்சனரியின் சிறப்புகள்: விக்சனரியின் தொழில்நுட்பமானது, 170உலகமொழிகளிலுள்ள ஒரு விக்சனரிதிட்டத்தின் சொல்லுடன் உடன் இணையும் திறன் கொண்டது. ஒரு மொழியின் தொழில்நுட்பத்தை பிறமொழியினரும் பின்பற்றும் வகையில் தொழில்நுட்பங்கள் வெளிப்படையாக அமைந்துள்ளன. இதனால் மொழிகளின் வளர்ச்சித்தடை விரைவாக விலகும் சூழ்நிலை இருக்கிறது. ஒரு மொழியினர் ஒருகுறிப்பிட்ட சொல்லுக்கான மொழிபெயர்பை செய்யும்போது, அதனை பிற மொழியினரும் எடுத்தாளும் வசதியுடையது. இதில் பங்கெடுத்துக் கொள்ள வயதோ, படிப்போ, மொழியோ, நாடோ எந்த தடையுமில்லை. ஆர்வம் இருந்தால் அறிமுகப்படுத்த அங்கு பங்களிக்கும் தமிழ்விக்சனரியினர் உதவுவர்.

தமிழ்விக்சனரியின் நிலைமை: இன்றளவில் தமிழ் விக்சனரியில் 2,83,337 சொற்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை(90%) ஆங்கிலச் சொற்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ள, ஆங்கிலம்-தமிழ் கட்டமைப்பு ஆகும். தற்போது தமிழ்-தமிழ்-ஆங்கிலம் கட்டமைப்பு விரிவாக்கப்ப உள்ளது. அதனை அடுத்து, ஒவ்வொரு இந்தியமொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பை தரவல்ல கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் மலையாளம்-தமிழ், தெலுங்கு-தமிழ் வங்கமொழி-தமிழ் (எசுப்பானியம்-தமிழ், உருசியம்-தமிழ், சீனம்-தமிழ், இந்தி-தமிழ்,தெலுங்கு-தமிழ், மலையாளம்-தமிழ் போன்றவை, ஒலிப்புகளுடன் வளர்ந்து வருகின்றன. )உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு மொழியும் அதற்கே உரிய ஒலிக்கோப்புகளோடு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பதிவேறும். தற்போது ஆங்கிலசொற்களின் அமெரிக்க ஐக்கிய ஒலிப்பும், தமிழ் ஒலிப்பும், சீனமொழி ஒலிகோப்புகளும் ஆயிரகணக்கில் உள்ளன. எசுப்பானியம்-தமிழ், அடிப்படைசீனம்-தமிழ் அகரமுதலிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. உலகெங்கிலும் வாழும் தமிழர், அவர்கள் வாழும் நாட்டின் மொழியின், மொழிபெயர்ப்புகளை இணைத்து, நம் அன்னைத்தமிழின் வளம் ஓங்க, செழிக்க, வளர்க்க, இத்திட்டத்தில் பங்குகொள்ள வேண்டும்.

தமிழ்விக்சனரியின் சொல்: விக்சனரியின் சொல் ஒன்றிற்கு ஒதுக்கப்படும் பக்க அளவு எல்லைகள் அற்றது. ஒவ்வொரு பக்கத்திலும் அந்தந்த சொல்லுக்குரிய ஒலிக்கோப்புகள், படங்கள், நிகழ்படங்கள், மேற்கோள்கள், அம்மேற்கோள்கள் உள்ள மூலப்பக்கங்கள், அந்த சொல்லுக்கு தொடர்புடைய சொற்கள் என மேம்படுத்த இயலும். இத்தகைய அமைப்புகளுடன் ஒருசில சொற்களே உள்ளன. அதிக அளவு பங்களிப்பாளர்கள் பதிவுகள் வரும் போது இந்நிலை மாறும். ஒருமணி நேரத்திற்கு தமிழ் விக்சனரியை சராசரியாக 1200நபர்கள் காண்கின்றனர். தொடக்க வளர்நிலையில் இருக்கும் தமிழ்விக்சனரியை இந்த அளவு பார்க்கும் போது, அது மேலும் வளரும் போது, வருகையாளர்களின் எண்ணிக்கை மேலும் பன்மடங்கு வளர வாய்ப்புண்டு. விக்சனரியின் வளத்தை கூகுள் மொழிபெயர்ப்பு கருவியிலும், சி இணைய அகரமுதலிகளும் பெருமளவில் பயன்படுத்துகின்றன.

தமிழ்விக்சனரியின் எதிர்காலம்: தற்போதைய தமிழ்விக்சனரியின் வளர்ச்சி மெதுவானது. இதற்குகாரணம் பங்களிப்பாளர்கள் ஒரு சிலரே உள்ளனர். ஒரு சில பங்களிப்பாளர்களின் முயற்சியிலேயே, தமிழ்விக்சனரி 170மொழிகளில், 16இடத்தில் இருக்கிறது. பலரும் ஈடுபட்டால், நம்தமிழ்விக்சனரி மேலும் முன்னேறும். ஒரு சொல்லை உருவாக்க சிலநிமிடங்கள் போதும். ஒவ்வொருவரும் தங்களுக்குத்தெரிந்த சொல்லையோ, அந்த சொல்லுக்கான மாதிரி வாக்கியங்களையோ, அச்சொல்லுள்ள இலக்கிய எடுத்துக்காட்டுகளையோ இட்டால் இதன் வளர்ச்சியும், தன்மையும் மேன்மையுறும். ஏதேனும் இதுகுறித்து உதவிகள் தேவைப்படின், ஒவ்வொரு பக்கத்தின் மேலிருக்கும் ஆலமரத்தடி பக்கத்திற்கு சென்று குறிப்பிடவும். உங்கள் கருத்துக்களையும், விக்சனரி குறித்த நிறைகுறைகளையும் அங்கு தெரிவித்தால், அதுவும் இத்திட்டத்தை மேலும் வளர்ச்சிக்கு உள்ளாக்கும். நம் மொழியின் வளர்ச்சிக்கு நாமே பங்களிக்க வேண்டும். எனவே, வருக! இத்திட்டத்தை மேம்படுத்துக!! இது ஊர் கூடி தேர் இழுத்தல் போன்றது. நம் தமிழுக்காக வாரீர்!!! வணக்கம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Info-farmer/விக்சனரி&oldid=1284332" இலிருந்து மீள்விக்கப்பட்டது