KarefoIndia
மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு ஆதாய நோக்கமற்ற நிறுவனமாகும். மொழிக் கணிமம் குறித்த விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் மாணவர்களிடம் உருவாக்குவது என்ற குறிக்கோளுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மொழிகளை ஆழமாகவும் விரைவாகவும் கற்பிக்க, புதுமையான ஆற்றல்மிக்க முறைகளைக் கண்டறியவும் உருவாக்கவும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் விழைகிறது.
செயலிகள்
தொகுபொதுப் பயன்பாட்டிற்கான தமிழ் மொழிக் கருவிகள் பலவற்றை இந்நிறுவனத்தின் இணையதளத்தில் காணலாம். இருமொழி அகராதியான "சொல்", உருபனியல் பகுப்பாய்வியான "பிரிபொறி", சொற்பிழைத்திருத்தியான "சரியா", இயைந்து வரும் சொற்கள் கண்டறியும் "எமோனி", தமிழ்ப் பெயர்கள் தேட "பேரி", தமிழ்த்தட்டச்சு பழக "வேகி" ஆகியவைக் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலிகளுள் சில. இவற்றுள் "சொல்", "பேரி", "எமோனி" ஆகியவைத் திறன்பேசிக்கான செயலிகளாகவும் கட்டணமன்றி கிடைக்கின்றன. "ஆடுகளம்" என்ற பெயரில் பல தமிழ்ச் சொல் விளையாட்டுகளையும் இந்நிறுவனத்தின் தளத்தில் காணலாம். "பிரிபொறி" செயலிக்குத் தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டு கணினித் தமிழ் விருது அளிக்கப்பட்டது. மொழிக் கணிமம் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றையும் இந்நிறுவனம் பதிப்பித்துள்ளது.
பயில்
தொகு"பயில்" என்ற தமிழ் மொழிக் கற்றல் திட்டத்தையும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் 2020ஆம் ஆண்டிலிருந்து நடத்திவருகிறது. இதில், பல நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இணையம் வழி தமிழ் பயின்று வருகின்றனர். கீழ்க்காணும் வகுப்புகள் இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.
→ எழுது - தமிழ் எழுத/படிக்க
→ பேசு - பேச்சுத் தமிழ்
→ கதை - எழுது/பேசு (இரண்டாம் நிலை)
→ குறள் - திருக்குறள்
→ இலக்கணம்-1
→ இலக்கணம்-2
→ இலக்கியம்
இவ்வகுப்புகளில் செயல்முறைகள், விளையாட்டுக்கள், உரையாடல்கள் வழி கற்பிக்கப்படுகின்றன.
அறி
தொகுஅறிவியல், கலை, சட்டம், மருத்துவம், வணிகம், வாழ்வியல் போன்ற துறைகளில் உள்ள அறிவைத் தமிழில் பதிவுசெய்ய 'அறி' என்ற தளத்தையும் இந்நிறுவனம் நடத்துகிறது. மாதந்தோறும் வெவ்வேறு தலைப்புகளில் நிகழும் அறிஞர்களின் உரைகள் காணொளியாகவும், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் கட்டுரைகளும் இந்தத் தளத்தில் காணலாம்.