கொத்தினால் மனிதர்கள் இறக்கக்கூடிய நஞ்சுகொண்ட நாகப்பாம்பையும் அதன் நச்சுப்பற்களைப் பிடுங்கிவிட்டு தனக்கு அடங்கிப்போகும்படிச் செய்து, ஒரு வட்டமானப் பெட்டிக்குள் அதை இருக்கச் செய்து, பிறகு பிறருக்கு, தன் விருப்பப்படி, அந்தப் பாம்பை படம் எடுத்து ஆடவைத்துக்காட்டி பிழைக்கிறான் பாம்பாட்டி...பிறர் அஞ்சி நடுங்கும் பாம்பு தன் வீரியம்/நஞ்சை இழந்த சூழ்நிலையில், அடிமைத்தனத்திற்குத் தள்ளப்பட்டு பாம்பாட்டியால் ஒரு பெட்டிக்குள் அடைத்துவைக்கப்பட்டு, அவன் இட்டப்படி ஆட்டிவைக்கப்படுகிறது...அப்போது அது ஒரு வெறும் சக்தி இழந்தப் பெட்டிப்பாம்புதான், நஞ்சுள்ள காட்டுப் பாம்பு அல்ல!...அதுபோலவே அனைத்துவிதமான வசதிகளும், சௌகரியங்களும் இருந்தாலும், சுதந்திரமாக நினைத்து செயல்பட திறனும், சூழ்நிலையும் இருந்தாலும் ஒரு சிலர் தனிப்பட்டக் காரணங்களால் தம்மைவிட எல்லாவகையிலும் வலுக்குன்றிய மனிதர்களுக்கு அடங்கி அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுத் தலையாட்டிக்கொண்டும், மறுப்பு இருந்தும் சொல்லாமல், அவர்கள் காலால் இட்டப் பணியை தன் தலையால் செய்து நிறைவேற்றிக்கொண்டும் இருப்பர்.....அவர்கள் நிலையும் இந்தப் பெட்டிப் பாம்பு போல இருப்பதால் அத்தகைய நபர்களை பெட்டிப் பாம்பு என்பார்கள்