தாம் சார்ந்த சாதி, குலம், மதம் ஆகியவையே மனித நேயம், அன்பு, பந்தம், பாசம், உறவு முறை ஆகியவைகளைவிடமிக மேன்மையானவை, அவற்றை என்ன விலைக் கொடுத்தேனும் காக்க வேண்டும் என்றுத் திடமாகக் கருதும் மக்கள் உள்ளனர்...இந்த சாதி, குலம் மற்றும் மதம் ஆகியவையே, சமூகத்தில் தம் கௌரவத்தை நிலைநிறுத்தும் அடையாளங்களாகக் கொள்வர்... இவர்கள் தம் குடும்பத்து உறுப்பினரொருவர் பிற சாதி, குலம், மதத்தைச் சேர்ந்தவர்களை சாதி/மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டாலோ அல்லது காதலித்தாலோ, தாம் பெற்ற மகள்/மகனாக இருந்தாலும், அல்லது உடன்பிறந்தவர்களாயினும் அவரைக் கத்தியால் குத்தியோ/வெட்டியோ அல்லது விடம் வைத்தோ கொன்றுவிடுவர்...மேலும் சில சூழ்நிலைகளில் ஒரு குடும்ப உறுப்பினரின், தம் குடும்பத்துக் கௌரவத்திற்கு விரோதம் என்று நினைக்கும் கள்ளக் காதல் தொடர்பு கொள்ளுதல், குடும்பத்தினரால் ஒழுங்குச் செய்யப்பட்டத் திருமணத்தை ஏற்க மறுத்தல், திருமணத்திற்கு வெளியே பாலுறவுக் கொள்ளுதல் ஆகியச் செயல்களும் கௌரவக் கொலைக்கு வழிவகுக்கிறது...கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்களும், அது அவர்களின் தவறல்ல எனினும், கௌரவக் கொலைக்கு ஆளாகின்றனர்...தன் சாதி, குலம், மதம் மற்றும் குடும்பத்தின் கௌரவத்திற்கு பேரிழுக்கு ஏற்பட்டுவிட்டது என்று கோவமும், ஆத்திரமும்கொண்டு அதற்குக் காரணமானவரைக் கொன்றுவிடுவதால் இத்தகையக் கொலைகளுக்கு கௌரவக் கொலை என்பர்...இதை ஆணவக் கொலை என்றும் குறிப்பிடுவர்...