இஃதொருப் பேச்சு வழக்குச் சொற்றொடர்...இந்துச் சமயத்தவருக்குக் காகப்பறவைகளுக்கு உணவளிப்பதென்பது ஒரு புண்ணிய காரியமட்டுமல்லாது ஒரு கடமையுமாகப் பார்க்கப்படுகிறது...இந்தச்செயலை காக்காக்குப் போடுதல்/ காக்காக்கு வைப்பது என்றுச் சொல்வர்...
இந்துக் குடும்பங்களில் முதலில் காகங்களுக்கு உணவளித்து, அவைகளின் பசி தீர்ந்த பின்னரே குடும்பத்தினர் சாப்பிடும் வழக்கம் இன்றளவும் சில இடங்களில் அனுசரிக்கப்படுகிறது...இதனால் முன்னோர்கள் மனமகிழ்ந்து, திருப்தியடைகின்றனர் என்று கருதப்படுகிறது...
காகங்கள் நம் முன்னோர்களின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றன...இறந்தவர்களுக்குத் தரும் திதிகொடுத்தல், திவசம் செய்தல் முதலியக் கருமங்களில், காகங்களுக்கு அளிக்கப்படும் உணவை, அவை உடனே வந்துத் தின்றால், இறந்துபோன முன்னோர்களே வந்து சாப்பிட்டுத் திருப்தி அடைந்ததாக பெருமகிழ்ச்சிக் கொள்வர்
மக்களின் உடற்நலத்திற்கும், நீடித்த ஆயுட் காலத்திற்கும் அதிபதியான சனி பகவானுக்கு வாகனம் என்பதாலும், இறப்பின் இறைவனான இயமதர்மராசனுடைய பிரதிநிதியென்பதாலும் காகங்களுக்கு உணவளிப்பதால், இவர்கள் மகிழ்வுற்று, நீடித்த ஆரோக்கியமான வாழ்வைத் தருகிறார்களென இந்துக்களால் நம்பப்படுகிறது...சனி பகவானால் ஏற்படும் துன்பங்களும், துயரங்களும் குறையுமாம்!
இன்னொரு வகையில், நேரம் ஒதுக்கி, பணச்செலவுச்செய்து, பிறருக்கு உணவளிக்கமுடியாத நிலையில், நாம் வழக்கமாக உணவுட்கொள்ளும்போதே, ஏதோவொரு உயிரினத்திற்கு உணவு அளிப்பதால் கிடைக்கும் புண்ணியப் பலனும், சம்பந்தப்பட்ட கடவுட்களின் {சனி பகவான் மற்றும் இயமன்) அருளும் கிடப்பதால், காக்காக்குப் போடுதல் மிகச் சிறந்தவொருச் செயலாகப் பார்க்கப்படுகிறது...
மேலும், காக்கைகள் நச்சுப்பொருளுக்கு விரைவில் இரையாகிவிடும் தன்மை கொண்டிருப்பதாக எண்ணப்படுவதால், நாம் உண்ணும் உணவில் ஏதாவது நஞ்சு, நமக்குத் தெரியாமல் கலந்திருந்தால், காகங்களுக்கு முதலில் உணவைப்போடுவதால், அவை உணவை உண்டவுடன் நச்சுக்கலப்பு விடயம் தெரிந்துவிடுமென்றும் ஒரு விளக்கம் கொடுக்கப்படுகிறது...