கிராமத்துத் தெருக்களில் நடந்து போகும்போது எனக்கு ஏழுவயது - யாராவது பெண்கள் அழைத்து, அஞ்சலட்டையைத் தந்து வாசிக்கச் சொல்வார்கள். என்னுடன் வரும் சேக்காளிகள் சிட்டாகப் பறந்துவிடுவார்கள். நான் அந்தக் கார்டை வாங்கிப் பார்ப்பேன். கூட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வாசிக்கும்போது கண்ணுக்கு எதிரே பூச்சிபறக்கும். நான் எப்படியோ, முக்கித் தக்கி, ஒரு வழியாக கல்வெட்டு எழுத்தை வாசிப்பதுபோல வாசித்து விடுவேன். ‘நல்லா பாருப்பா.. இன்னம் ஏதாச்சும் தாக்கல் இருக்கும்’ என்ற பெண்ணின் குரலுக்கு ‘அவ்வளவுதாங்க’ என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவேன். தெருமுனையில் எனக்காகக் காத்திருக்கும் சேக்காளி, ‘நல்லா மாட்டிக்கிட்டியா’ என்பான். இரண்டாம்வகுப்புபடிக்கும் மாணவனான நான் அஞ்சலட்டை வாசித்தது செய்தியாகப் பரவியது. ( வாசிப்பின் வழியே பதிவாகிடும் வாழ்க்கை, ந.முருகேச பாண்டியன்)